சொந்தமாக
வீடு கட்டிய பின்பே
திருமணமென்று..
சாதித்து காட்டினார்
தமிழ்வாணன்.
உயிரோடு ஒன்றிய
உணர்வாய்
உறவாக வந்தாள் தமிழரசி.
இரு சக்கர வாகனத்தில்
கணவனின் இடுப்பை
கட்டிய பயணத்தில்
மருமகளின் கடுப்பை
ரசிக்கும் மாமியாராக
இப்போதும் தமிழரசி
தனக்கு தலை
வலித்தாலோ
தன்னவனுக்கு
கால் வலித்தாலோ
தமிழரசியின் தலைக்கு
தமிழ்வாணனின்
கால்கள்தான்
தலையனை..
தலையாய அணை.
உறங்கும்போது..
அவள் கைகள்
அவர் இதயத்தை
தொட்டபடியே இருக்கும்
அவரின் மூச்சுக்காற்று
இவள் மீது..
பட்டபடியே இருக்கும்.
கொஞ்சலிலும்..
செல்ல கோபத்திலும்
மோதிக்கொள்ளும்
தலையனைகள்..
பிரசவிக்கும் பஞ்சுகளோடு
காதலையும் திணித்து
தைப்பதாலோ என்னவோ
தமிழ்வாணனின்
தலையனை..
பெரும்பாலும் தமிழரசியின்
முந்தானைக்குள் இருக்கும்.
நாற்பது வருட காலமாக
மாறாத இவற்றோடு..
அந்த பெரிய
படுக்கையறையை
சேர்த்துக் கொள்ளலாம்.
நான்கு சுவர்களுக்கு
மத்தியில்
இளமை மாறாத
அந்த காதலை
கண்டு ரசிக்கும் பாக்கியம்
பெற்றவை சன்னல் வழி
வானம் தான்.
ஆம்..
இயற்கையின்..
பருவ மாற்றங்களில்
எட்டிப்பார்க்கும்
சூரியனும் சந்திரனும்
நிறைவேறாத
தங்கள் காதலுக்கு
ஆறுதலாய் இவர்களை
ரசித்துவிட்டே கடந்துபோகும்.
மகனின் திருமணத்திற்கு
உறவுகள் சொன்னபோதும்
அந்த பெரிய அறையை
விட்டுத்தராமல்
சின்ன அறையைத் தான்
தர சம்மதித்தாள் தமிழரசி.
அவர்களை பொருத்தமட்டில்
அந்த அறை..
மாடப் புறாக்கள் வசிக்கும்
தாஜ்மகால்.
சிட்டுக்குருவிகள் அமர்ந்த
தஞ்சை கோபுரம்.
வள்ளுவனின் முப்பால்
சுரக்கும் புன்னியத்தலம்.
காதல் வற்றாது
என்றும் தாகம் தீர்க்கும்
ஜம் ஜம் கிணறு.
மகனின் மகள்
சடங்கான..
ஒரு மாதத்தின்
கடைசி வாரம்..
மகளுக்கு தனியறை
வசதியாக இருக்கும்
அப்பாவை நடு கூடத்தில
படுக்கச்சொல்லுமா
உன்னோடு
மகள் படுக்கட்டும்
என்று சொன்ன போது
தடுமாறிய தமிழரசி
உன் அப்பா
கூச்ச சுபாவமுடையவர்
விருந்தாளி வந்தாலே
முகம் கழுவி
சட்டை போட்டுகிட்டுதான்
வெளிய வருவாரு அவர
எப்படி ஹால்ல...
யோசிச்சு சொல்றேன்
என சொன்னவள்
கணவனிடம்
எதுவும் சொல்லாமல்
வழக்கமாக அவர் மேல்
கையை போட்டு படுத்தவள்
உறங்கும்போது என்ன
நினைத்தாளோ..
காலையில் எழவேயில்லை
தமிழ்வாணன் அழவேயில்லை
தமிழரசி தம்மோடு
இருப்பதாகவே
சொல்லிக்கொண்டார்.
அந்த அறையை விட்டு
அவர் வந்ததேயில்லை.
நாற்பது வருட காதல்
நினைவுகளில் மூழ்கியவரை..
சில வருடங்களுக்கு பிறகு
மகன் தான்...
எழுப்பினான்.
மகளுக்கு கல்யாணம்
பேசியாச்சு
இந்த ரூம்தான் மகளுக்கு
சரியா இருக்கும்..
நீங்க ஹாலுக்கு
வந்திடுறீங்களாப்பா..
நிலை குத்திய கண்களோடு
சரியென வெளியே வந்தவர்
வீதியில் நடந்தார்..
தமிழரசி தன்னோடு
இல்லையென்பதை
இப்போதுதான் உணர்ந்தாரோ
என்னவோ..
நடந்து கொண்டேயிருந்தார்..
பார்க்க சகிக்காத வானம்
முகத்தை மூடிக்கொள்ள..
மேகத்தை இழுக்கிறது.
அவரோடு சேர்ந்து..
அழத் தொடங்கியது..வானம்.
💔💔💔💔💔💔💔💔💔💔