விவசாயி கவிதை

சூரியனை எழுப்பிவிட்டே
வயலுக்குச் செல்வான்.
வெயில் போர்த்திய மேனியில்
பூக்கும் வியர்வையை
பறித்து பறித்தே
சோர்ந்து போகும் காற்று.
கஞ்சி கலையத்தை
இவன் கையிலெடுக்கும்போது
அடம்பிடித்த பசி
அடங்கிப் போயிருக்கும்.
மாலையில் மாடோடு
நிலவையும் அழைத்துக்
கொண்டே வீட்டிற்கு செல்வான்.
நடை தளர்ந்ததில்லை
உணவு உற்பத்தி செய்யும்
இயற்கையின் காதலன்
என்ற கர்வம்
விழியோடு எப்போதும்
உருண்டு கொண்டிருக்கும்.
தன் வயல்வெளியின் விலாசத்தை
மேகத்துக்கு அனுப்புவான்.
நதிக்கு வழி காண்பித்தே
எங்கோ பெய்த மழையை
வாய்க்கால் அழைத்து வரும்.

மண் உரமாவதற்கு..
வாத்துகளும் ஆடுகளும்
அவன் வயலுக்கு வந்து
தவமிருக்கும்.
பயிரை பாதுகாக்க
கோழியும் குஞ்சுகளும்
பூச்சிகளை பலி கொடுக்கும்.
எள் எண்ணெய்யாக
மாடுகள் கிரிவலம் போகும்.
நெல் அரிசியாவதற்கு
யானைகள் ஆசீர்வதிக்கும்.

விதையை மண்ணில்
பூக்க வைத்தான்.
கொடியை விண்ணோடு
படரவிட்டான்.
பூவை காற்றோடு
சிரிக்கவிட்டான்.
காயை வெயிலோடு
கனியவிட்டான்.
அது ஒரு பொற்காலம்
என்பார் அப்பா.

விவசாயி
என்று சொல்லிக்கொள்ள
பெருமைபட்ட காலம் இப்போது..
விவசாயி என்று சொல்பவனை
அனுதாபப் பார்வை
பார்க்க வைத்துவிட்டது.
இன்னுமா செய்கிறாய்
என்று ஏளனமாய்
சமூகத்தின் பார்வை
எம் உழவனுக்கு
பிழைக்கத் தெரியாதவன்
என்ற முகமூடியை மாட்டிவிடுகிறது.

மண்ணை மலடாக்கி
உழவனை கிழவனாக்கிய
சமூகம்..
படித்த இளைஞனை
வேளாண்மைக்கு
ஊக்கப்படுத்தவில்லை.
டை கட்டி கை கட்டிய
அடிமை தொழிலுக்கு
ஆடம்பரத்தின் கதவை
திறந்துவிட்டே காத்திருக்கிறது.
பன்னாட்டு நரிகள்
பணத்தை கொடுத்து
அவன் நேரத்தை வாங்கி கொள்ள
வண்ணக் கனவுகளை காட்டி
அவன் உறக்கத்தை
களவாடுகிறது.
ஆசையை கொடுத்து
ஆரோக்கியத்தை அபகரிக்கிறது.
வேளாண்மைக்கு எதிரான
சிந்தனைகளை திணிக்க
உழவனின் மகனுக்கு
அரசே போதுமானதாக இருக்கிறது.

உரு மாற்ற செய்யப்பட்ட விதை
உருவமாற்றத்தை தருகிறது.
தாவரங்களுக்கு
பருவ மாற்றத்தை தருவதில்லை
விலை போன அதிகாரிகளிடம்
விதை வாங்க
நிர்பந்திக்கப்படுகிறான்
ரசாயான உரம் வாங்க
வரிசையில் நிற்க
வைக்கப்படுகிறான்.
கடன் காலைப் பிடிக்கிறது.
மகனின் பேண்ட் சட்டை கனவு
அவன் கையை பிடிக்கிறது.
சேற்றில் ஒரு காலை
வைத்துக்கொண்டே
ஆற்றில் ஒரு காலை வைக்கிறான்.
வறண்ட ஆறு சுட்டதும்
மகனோடு கல்லூரியில்
காலை வைக்கிறான்.

பசிக்கு பாத்தி கட்டியவன்
தன்னை பற்றிய பரிகாசத்திற்கு
வேலியை கட்டுகிறான்.
உழைப்பை தின்றுவிட்டு
ஊதியத்தை ஏப்பம் விடுவதாக
அவன் விளைய வைக்க
எவனோ விலையை வைக்கிறான்.

நிலமோடு வாழ்கிறான்
நலமோடுதான்
வாழமுடியவில்லை.
வயல்வெளியில்
தனக்கு தொட்டில் கட்டி
தாலாட்டியவனுக்கு..
மழை இப்போதெல்லாம்
கண்ணீர் அஞ்சலி
செலுத்தவே வருகிறது.

அழுத விழிகள்
உழுத மொழியில்
அரசை தொழுத வேளையில்
அசராத உழைப்பை
தானியமாக பெறுவதற்கு
தொடரும் அச்சத்தை
மானியமாகவே தருகிறார்கள்.

எதையாவது பயிரிட
வேண்டுமென்று
எப்படியாவது போராடிட
வேண்டுமென்று..
வேளாண்மைக்கு
வியர்வையை தருகிறான்.
வெள்ளாமைக்கு கண்ணீரை
பெறுகிறான்..ஆமாம்
வாங்கிய கடனுக்கு
விளைச்சலை மட்டுமல்ல
நிலத்தையும் தருகிறான்.
எல்லை கடந்த
தீவிரவாதமென்பது
நமக்கு எங்கோ நடக்கும் சம்பவம்.
உழவனை பொருத்தமட்டில்
அது குமட்டிக்கொண்டிருக்கும்
சஞ்சலம்.

பசியின்
நிர்வாணத்தை மறைக்க
மண்ணுக்கு ஆடை உடுத்தி
நம் வயிற்றை
சமாதானப்படுத்தும்
இந்த மாபெரும் கலைஞன்
புவியின் மீது
எழுதும் கவிதையெல்லாம்
வைரலாகத்தான் ஆகிறது.
எழுதிய வேளாண்கலைஞன் மட்டும்
தன் அடையாளங்களை
தேடிக் கொண்டிருக்கிறான்.
பாதகர்களே..
உங்கள் கட்சி கொடிகளுக்கு
அவன் கோவணம்தானா கிடைத்தது.
💢💢💢💢💢
நயினார்.

2 Comments

  1. உங்களது ஆழமான அழகான சிந்தனை வரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
Previous Post Next Post