நீயும் நானும்..

நீயும் நானும்
இணைந்த கதை
கேட்கிறார்கள்
எப்படிச் சொல்வேன்
சிப்பிக்குள்
முத்து வந்த கதையை
துவக்கி வைத்து
நம் காதலை 
தூக்கிச் சுமந்தது
நம் அலைபேசி தானே
தவழ்ந்த தயக்கமும்
தத்தி நடந்த ஆர்வமுமாய்
காலூன்றிய நேசத்தை
நாலு கால் பாய்ச்சலாய்
பீறிட்ட உற்சாகம்
உயிராய் வளர்த்தது
காதலையா..
இந்த சமூகம்
ஆண் பெண் நேசத்தை
காதலென்றே 
சொல்கிறதென்றால்
நமக்குள் உண்டானது
காதல் அல்ல..
காமம் கதவை தட்ட
காதல் திறக்கிறதென்றால்
நமக்குள் உண்டானது
காதல் அல்ல..
உணர்வுகள் சங்கமிக்க
உயிர்கள் உறவாடுவது
காதலென்றால்
அப்போது சொல்வேன்
நமக்குள் இருப்பது
காதல் தான்.
காதல் கொண்ட
காதல்..
நம்மை காதலித்தது.
பலவீனங்களை 
பகிர்ந்து கொண்டு
பலமானது நம் காதல்.
நம்பிக்கையை
சுமந்துகொண்டு
எத்தனை சந்தேகங்களை
கேட்டுக்கொண்டோம்.
கூட்டுப் புழு நீ
எனக்கு பட்டாம்பூச்சியாய்
தெரிந்ததும்
எரிந்த கட்டையாய் நான்
உனக்கு பீனிக்ஸ் 
பறவையாய் தெரிந்ததும்
காதல்..
வாழ்ந்த காதலர் நாம்தானே..
இழுத்து சுருக்கும்
அந்த "டேய்"..யில்
நான் சுருண்டு விடுவதும்
சுருக்கி இழுக்கும்
அந்த "அடியே.."யில்
நீ சொக்கி நிற்பதும்
காதல்..
காதலிக்க கற்றுக்கொண்டது
நம்மிடம் தானே.
எனது சோகத்தை விரட்ட
உனது "ஓய்"போதுமானது தானே.
நீ..போ என்றால்
நான் வர வேண்டும்
மாட்டேன்
என்றால்.. 
மீட்டேன் என பொருள்
என்னடா..
என்பது கேள்வி அல்ல
அது ஒரு கேள்வியின் பதில்
ஏன்டா..
என்பது கேள்வி அல்ல
அது ஒரு ஆச்சரியத்துக்கான
ஒப்புதல்.
ம்..
என்பது பதில் அல்ல
அது அடுத்து வரப்போகும்
கேள்விக்கான ஆரம்பம்
என்பதெல்லாம்
காதல் விளங்கிய
இலக்கணமல்லவா..
செல்லமா..என்பேன்
என்னமா..என்பாய்
ததும்பும் தாய்மையை
பாலினம் மறந்து
பருகிய காதல்
உருகுவதும் உறைவதும்
நம்மிடம் தானே..
முத்தம் பெற 
கோபம் காட்டுவேன்
மொத்தம் தர
சமாதானப்படுத்துவாய்
சண்டை போடுவேன்
கூல் பன்றேன்டா
என அருகே வந்து
சூடேற்றுவாய்
தூங்கு என
கால் பிடித்துவிடுவாய்
எழுப்புவதற்கு என்று
எனக்குத் தானே தெரியும்
நம்மிடம்..கற்கும் 
பாடங்களைத் தானே
காதலர்களுக்கு
பரிந்துரைக்கிறான் காமன்.
எனக்கு சிறகு தந்தாய்
என் எண்ணங்களுக்கு
வண்ணமடித்தாய்
உன்னைத் தூக்கி சுமந்து
பறக்கும்போது..
என் வானம் 
சுருங்கியல்லவா போகும்.
உன்னை தரை 
இறக்கும்போது
பூமியின் புவியீர்ப்பு
சற்று குறைந்துதான்
போகிறதாம் 
நம் அன்பின் 
கணம் கூடுவதால்.
இத்தனைக்கும்
கேட்பாரட்ற தணிமையோ
கட்டவிழ்த்த சுதந்திரமோ
நமக்கில்லை
பொறுப்பை சுமந்த
தண்டவாளங்களாகவே
இருக்கிறோம்
விலகியிருப்பதாக 
தெரிவோம்
ஆனாலும் நமக்கு
பிரிவுகள் கிடையாது.
இந்த வயதிலும்
மாறாதா காதலா
என கேட்பவர்களுக்கு
எப்படித் தெரியும்
நாம் இணைந்த நாளில்
புதியதாய் பிறந்தோம் என்று.
அன்றும் இன்றும்
என்றும்...
நாம் முப்பத்திமூன்று
வயதை தாண்டியதில்லையே
நான் நேசிக்கும்
கவிதைப் புத்தகம்
நீ தானே..
புரட்ட புரட்ட
உனக்கு வெட்கம்
குறைவதில்லை
எனக்கு..
பக்கம் குறைவதில்லை
வாசித்து மூழ்குவேன்..
எனை  சுவாசித்தே
நீ இழுப்பாய்...
உயிரை ஊடுறுவி
என் எழுத்துக்கள்..
இழுத்து வரும் 
வார்த்தைகளின்
வசிப்பிடம் நீ தானே
என் கிறுக்கல்கள்..
கவிதையாவது 
உன் திருத்தல்களுக்கு
பிறகு தானே..
உன் கூந்தல்..
என் கைகள் 
வசிக்கும் பிருந்தாவனம்
உன் நெற்றி..
என் இதழ்கள்
சுற்றி வரும் 
மதுக்கிண்ணம்
உன் கன்னம்..
என் விரல்கள்
விளையாடும் மைதானம்
உன் இதழ்கள்..
என் உதடுகளின் ஊஞ்சல்.
உன் விழிகள்..
எனை வழி நடத்தும் பாதை
இப்படிச் சொல்லிக்கொண்டு
போகையில் இடை மறிப்பாய்
இடைவெளி குறைப்பாய்
என் உலகம்..
சுருங்குவதை 
ரசிக்க முடியவில்லை
என என் விழி 
பார்த்து சொல்வாய்
வழி தவறிய 
ஆட்டுக்குட்டிகளாய்..
தெரிவோம் 
நம் இறைவனுக்கு.
ஆதம் ஹவ்வா..
வாழ்ந்து பார்க்க
ஆசைப்பட்ட வாழ்க்கை
இது தானாம் செல்லமா
சைத்தான் கொடுத்த
கனிக்கே ..
அந்தக் காதலென்றால்
காதல் கொடுத்த
கனியாக நம்மை உண்ணும்
மண்...
விதைக்கும் கனியால்
புதிய இந்தியா..
அல்ல 
புதிய உலகமே பிறக்காதோ...
💓💓💓💓💓💓💓💓💓💓💓
நயினார்

Post a Comment

Previous Post Next Post