ஜாதி மதங்களை கடந்தது
நட்பு மட்டுமல்ல..
இதுவும் தான்.
தன்மானத்தை தின்றுவிட்டு
செரிமானமாவதற்கு..
சுயமரியாதையை ஓடச் சொல்லும்.
என்ன செய்கிறோமென்று
யோசிக்க வைக்காது.
எதையாவது செய்
என்ற இதன் கட்டளைக்கு
கீழ்படியாதவர்கள் இருக்க முடியாது.
மரணம்கூட
ஒரு முறைதான் வரும்
இது ஒவ்வொரு முறையும் வந்து
செத்து செத்து பிழைக்க வைக்கும்.
கோபம் துணிச்சல் பொறுமை
வெறுப்பு விரக்தியென்று
இது உணர்வுகளை சோதிக்கும்போது
உயிர் தன்..
உரிமைக்கு யாசிக்கவே செய்யும்.
இது வராமலிருக்க லஞ்சம்
வாங்குவதில்லை
கடமை கண்ணியம் கட்டுப்பாடெல்லாம்
இது கொடியசைத்தால்
காற்றில் பறக்க ஆரம்பிக்கும்.
அழகைகூட அசிங்கமாக காட்டும்
ரசனையற்ற உணர்வு.
இது வழிமறித்தால்
வயிற்றுக்கு..
எதாவது கொடுத்தாக வேண்டும்.
இது..உயிர்களின் அரக்கன்.
உணர்வுகளின் கிறுக்கன்.
ஆனால்..
உணவின் அடிமை.
பசி.
💢💢💢💢
.
பசி
நிராகரிப்புகளையும்
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
வெறிபிடித்த..
வறுமைக்கு மட்டுமே வரும்.
💢
வறுமை கடக்கும் வாழ்க்கையில்
தூக்கம் சொந்தம்.
கருணை உறவு
பசி மட்டும் பகை.
💢
வறுமையின் வசதிக்காக
கிடைப்பதைக் கொண்டு
திருப்தியடைவது
இல்லாமையின் நிர்பந்தம்தான்.
💢
எதற்கும் பொருத்தம் பார்ப்பதில்லை
கூடினால் போதுமென்பது
வறுமையின் பெருந்தன்மை.
💢
பசித்தவையெல்லாம் தோழர்.
கிடைப்பதெல்லாம் புதையல்.
கொடுப்பவரெல்லாம் கடவுள்.
வறுமை வகுத்த சட்டம்.
💢💢💢💢💢💢
நயினார் உணர்வுகள்.