உறவு கவிதைகள்|விதவையின் டைரி குறிப்பு|Uravu kavithai|Nynarin Unarvugal

அன்பு கணவரே..

நீங்கள் இல்லாமல்
ஐந்து வருடங்கள் கடந்திருக்கிறது
என்பதை விட..
கடத்தியிருக்கிறேன் என்றே
சொல்ல வேண்டும்..ஆமாம்
சந்தர்பங்களை தவிர்க்கலாம்
காலத்தின் நிர்பந்தங்களை
நிராகரிக்கவா முடியும்..?

புகைப்படத்தில் சிரிப்பதை
பார்க்கும்போது
நான் அழுகிறேன்
எங்கும் எப்போதும்
கூடவே வருவேன்
என சொன்ன நீங்கள்
கூட கூட அழைக்காமல்
சென்றதேனோ..?

உங்கள் ஆயுளை குறைத்து
என் ஆயுளை கூட்டி..
இறைவனின் கணக்கு
என்ன இது..?
வரவுக்கு மீறி செலவென்றால்..
போராடலாம்
செலவழிக்கப்படாத
வரவை என்ன செய்ய..
உணர்ச்சிகளுக்கு
உணவளிக்கப்படாத
இரவை என்ன செய்ய..
உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத
உறவை என்ன செய்ய..
கேள்விகள்..வேள்வி நடத்துகிறது

கணவரே..
விதிக்கப்படுவது
வதைக்கப்படுவதற்கு தான்
என்றால்..
பதிக்கப்படும் உறவுகளோடு
புதைக்கப்படும் உணர்ச்சிகளோடு
பாதிக்கப்படும் பெண்
நடமாட வேண்டுமென்றால்..
அது நாடகமாகாதோ..
ஓ..இதைத்தான்
உலகம் ஒரு நாடகமேடை
என்கிறார்களோ..
அப்படியானால் 
என் பிரியமானவரே..
ஒத்திகைப் பார்த்து..
கற்பனை கோர்த்து
ஒப்பனை சேர்த்து..
தாங்கள் நடிக்க வருவதற்குள்
மேடையை விட்டு தள்ளிவிட்டு..
என்னை வேடிக்கை பார்க்கும்
இறைவனை என்ன செய்ய...?

என் பிரியமானவரே..
உங்களை இழந்து நான்
துக்கப்பட்ட போதும்
தூக்கம் கெட்ட பொழுதிலும்
விழுதுகளாய் தாங்கியது நம்
மகள்கள் தானே..
என் சிறகை முறித்துவிட்டு
நடப்பதற்கு ஊன்றுகோலாய்
மகள்களை தானே தந்திருக்கிறீர்
நடக்க பயின்றுகொண்டேன்
தன்னம்பிக்கையோடு இருப்பதாய்
நடிக்க பழகிகொண்டேன்
தனிமையில் நான் கண்ணீர்
துடைப்பதை கவனித்தீர்களா...?

ஒரு கதவை மூடினால்
மறு கதவு திறக்குமாமே..
தலைவாசலை மூடிவிட்டு
ஜன்னலைத் தானே
திறந்திருக்கிறான் இறைவன்
சிறைவைத்து..
உயிர் வாழ மட்டுமே
பணிக்கப்பட்டிருக்கிறேன்...
நம் மகள்களுக்காக

மூத்த மகளை கல்லூரியில்
சேர்க்கும்போது 
நீங்கள் இருந்திருந்தால்
என் பங்குக்கு 
நானும் சில புத்திமதி
சொல்லியிருப்பேன்
அறிவுரை..
விரிவுரையாகியிருக்கும்
ஆனால் அன்று..
விலக்க வேண்டிய
பிரச்சனைகளையும்
விளக்க வேண்டிய அவசியமின்றி
விளங்க வைத்த பக்குவம்
உங்கள் வெற்றிடமா..?
அல்லது..
நீங்கள் இல்லா வேற்று இடமா..

நீங்கள் இரு கைகளால் என்னை
அணைக்கும்போது என் மேனி
கொதிக்க ஆரம்பிக்கும்..
இப்போதோ மகள்கள்
ஆளுக்கொரு பக்கமிருந்து
ஒரு ஒரு கையை மேல்
போடும்போது
வெப்பம் தனியவே செய்கிறது

காலத்திற்கு தகுந்தார்போல்
கோலம் மாறும்போது
புள்ளி மாறாமல் வலைந்து
செல்கிறது என் பெயர்
இன்னார் மனைவி போய்
இன்னார் தாய் என்றானேன்
என் சுயம் தொலைத்தேனா..?
என யோசித்துப் பார்க்கையில்
கொஞ்சம் பயம் வருகிறது
மகள்கள் மணமுடித்தபின் என்
சுயம் என்னவாகும்...?

நிரந்தரமற்ற உலகில்..
கூடவே இருக்க யாருக்கும்
வரம் அளிக்கப்படவில்லை தான்
ஆனாலும்..
கணவனை இழந்த
என் போன்றோரை
ஏதோ சாபம் 
வாங்கியவர்களை போல்
இச்சமூகம் பார்ப்பது
எந்த வகையில் நியாயம் உயிரே..?

கேள்விகள்..
வேள்வி நடத்துகிறது
அதில் நான் வெந்து
கொண்டேயிருக்கிறேன்...

கைம்பெண்.
🍂🍂🍂🍂🍂
நயினாரின் உணர்வுகள்.

1 Comments

  1. பரிதவிப்பின் ஆழத்தை அழகான வரிகள் சரியாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அய்யா!!

    ReplyDelete
Previous Post Next Post