ராஜி..என்கிற ராஜேஸ்வரி
என் தோழி
குறுகிய காலத்தில்
பெருகிய அன்பு..வியக்கிறேன்
குறுஞ்செய்தியில் தொடங்கி
நெடுந்தூரம் வந்தாயிற்று
வார்த்தைக்கு வார்த்தை
அவள் சொல்லும் அந்த ..ம்..
வெற்றி இலக்கை அடைய
வரும் வீரனை உற்சாகப்படுத்தும்
கமான்..கமான்..என்பது போல இருக்கும்
நானும் ஒவ்வொரு முறை முயற்சித்து தோற்கிறேன்
நட்போடு காதல் இயல்பானதுதான்
நட்பு..காதலாகாதா..
தோழி.. இப்போது காதலியாக அவதானிக்கிறாள்
இத்தனைக்கும் நேரில் பார்த்ததில்லை
புகைப்படத்தில்..ஒடிசலாக..
பிடித்தது எது சொல்ல தெரியவில்லை
ஈர்த்துவிட்டாள்..
என் காதலை அவள் ஒரளவு புரிந்திருக்கிறாள் என்றாலும்..
எல்லாவற்றையும் பகிரும்
அவள் தோழி எனக்கு வில்லியாக இருப்பாளோ என்ற அச்சமிருக்கிறது
விரைவில்..
என் ராஜியை மணமுடிப்பேன் என்று மட்டு்ம் உறுதியாக நம்புகிறேன்..
.
.
.
.
இரயிலிலிருந்து இறங்கும்போது மயங்கி விழுந்த முதியவரின் சட்டை பையில் சில்லறை காசுகளுடன்...அந்த தாளில் இருந்ததை தான் கூட்டத்தினர் படித்துக்கொண்டிருந்தார்கள்.
அந்த பையனோட அப்பாவா இருப்பார்னு நினைக்கிறேன்..
இளைஞன் அவன் தனக்கு தோன்றி்யதை சொன்னான்
ஏன் அந்த பொண்ண பெத்தவரா இருக்ககூடாதா..பையன் டார்ச்சர்ல பையனை பாக்க வந்திருக்கலாமே...
இது நடுத்தர வயது பெண்மணி
இல்லை...பேப்பர் பழசா கசங்கி இருக்கிறத பாக்கும்போது..பல வருசங்கள் கழிச்சி தன் காதலிய பாக்க இவரே வந்திருப்பார்னு நினைக்கிறேன்
அரசியல்வாதி போல் வேட்டியிலிருந்தவர் சொன்னதும் கூட்டம் சிரித்தது.
கூட்டத்தை விலக்கி எட்டி பார்த்த..
பள்ளிச்சீருடையில் வந்த அந்த சிறுவன் தான் மிச்சம் வைத்திருந்த தண்ணீரை எடுத்தான்.
.
.
.
.
ச்ச என்ன உலகமிது...
வேர்கடலை மடித்து கொடுத்த காகிதத்தின் ஒரு மூலையில் தன் மகன் அவசரமாக கிறுக்கிய அந்த அலைபேசி எண் இந்த சிறுவன் கண்ணுக்காவது தெரிய வேண்டுமே இறைவா...