உன் துயரங்களுக்கு
ஆறுதலை எதிர்பார்க்காதே
அனுதாபத்தை அள்ளிவீசி
உன் நம்பிக்கையும் சேர்த்தே புதைத்துவிடுவார்கள்.
மறக்க முடியாத காலத்தை
கடிந்து கொண்டிருக்காதே
நிரந்திரமில்லாத நிமிடங்கள்
கடந்து கொண்டிருக்கிறது
மாற்றத்தை காண
உன் எதிர்பார்ப்புகள்
பசித்திருக்கட்டும்.
உதவிக்கரம் நீட்ட
உறவுகள் வேண்டாம்
உயிரோடு இருக்கிறாய்
உணர்வோடு இருக்கிறாய்
உன் நம்பிக்கையை
துணைக்கு அழைத்துக்கொண்டு
வலியை போக்க வழியை தேடு.
உறவை இழந்தாயா
ஏற்றுக்கொள்..
முன்னே போயிருக்கிறார்கள்
நீ பின்னே செல்ல இருக்கிறாய்
பிறப்பும் இறப்பும் விதிக்கப்பட்டது
நினைவை கடப்பதற்கு
கொஞ்சம் அழுதுவிட்டு வா
நல்லாத்மா சாந்தியடைய
தொழுதுவிட்டு வா
நீ இருக்கிறாய்
இனி இறக்கப் போகிறாய்
அதற்குள் என்ன செய்ய வேண்டும்
பணத்தை சம்பாதித்து
ஒன்றும் சாதிக்கப் போவதில்லை
நீயே அனுபவிக்க போவதுமில்லை
மனங்களை சம்பாதிப்பது எளிது
உனக்காக அழுவதற்கு மட்டுமல்ல
உனக்காக தொழுவதற்கும்
அவர்களை தயார்படுத்து.
உன் கடமையை
நீ கழட்டிவிட முடியாது
உன் மூச்சிருக்கும் வரை
சுமக்காதே..சுவாசி.
செத்தாலும் வாழும் மனிதர்கள்
பணக்காரர்களாக மட்டும்
இருப்பதில்லை.
என்னால் என்ன முடியுமென்று
யோசிக்காதே
உன்னை சுற்றியுள்ளவர்கள்
நல்லவனாக உன்னை
கொண்டாடினாலே போதும்
நீ சாதனையாளன்தான்.
முயன்றதை விடாதே
இயன்றதை செய்
கொடுப்பதற்கு..
ஒன்றும் இல்லையென்று
சொல்லாதே
புன்னகை..
உன் அழியாத செல்வம்.
அன்பை..
உன் பாதையெங்கும் தெளி
கருணையை..
உன் விழிகளால் கோலம் போடு.
அமைதி குடி கொள்ள
மகிழ்ச்சி கூடிக்கொள்ளட்டும்.
உன் மனவாசல் திறந்திருக்கட்டும்
மரணமே வந்தாலும்..
உனை வாழ்த்தும்
மனங்களோடுதான் வரும்.
சாவதற்கு தயாராக
இன்றே...வாழ்ந்துவிடு.
👍👍👍👍👍👍👍👍