பசிக்கான கவலையை
போக்கிவிட்டது..
உறங்க இடம்
வேண்டுமே என்ற கவலை
கல்லு வீட்டில்..
விருந்தாளியாக
கதவை தட்டும் இது
அனுமதியில்லாமல்
குடிசை வீட்டின்
கூரையிலிருந்தே
கடன்காரனை போல
குதிக்கிறது.
இவர்களிடம்
ஆயுதமோ..கேடயமோ..
எதுவுமில்லை
போருக்கு வரும் இதனிடம்
சரணாகதியானாலும்
சமாதானத்தை ஏற்காமல்
இவர்களின் தன்மானத்தை சூறையாடிவிட்டு போகிறது.
நனைந்ததை
உலர்த்துவதற்கு
மேனியை
நிர்வாணப்படுத்தும் இது
அவர்களின் வெட்கத்தை
உடுத்திக்கொள்கிறது.
ரசிக்கமுடியாத கவிதையாக
பக்கத்தை புரட்டுபவர்களை
வசிக்க முடியாத
சூழலில் விரட்டி விரட்டி
வாசிக்க வைப்பதில்
இதற்கு அப்படியொரு ஆனந்தம்.
தள்ளு வண்டியும்
நடைபாதை வியாபாரியும்
தண்டல்காரனிடம்
அவமானப்படுவதற்கு
முதல் நாளே வந்து
ஒத்திகை பார்க்கிறது.
இது வரமா சாபமா
என்று கேட்கமுடியவில்லை
நல்ல கவிதையில்
சில எழுத்துப் பிழைகளை
சகித்துக்கொள்ளத்தானே
வேண்டியிருக்கிறது.
மழை.
✨✨✨