அவள் ஏக்கத்திற்கு
உடை போடும்போதெல்லாம்
ஏமாற்றம் அலங்காரமாக தெரிகிறது.
தன் தாய்மையை
அந்த டெடி பொம்மைக்கு
தத்துக் கொடுத்துவிட்டு
குழந்தையாக சிரிக்கும்போது
அனுதாபத்தை அவிழ்த்துவிட்டு
அவள் நம்பிக்கை..
அவமானப்படுகிறது.
பொறுமையை இழக்காதே
என்று அவள் பக்தி
சொல்லும்போதெல்லாம்..
சக வயது தோழி
இரண்டு பிள்ளைகளுக்கு
தாயாகியிருக்கிறாள்..
என்ற அவள் தாயின் அழுகுரல்
செவிட்டில் அறைந்து செல்லும்.
வந்தவர்கள் முன்பு கை கூப்பி
மகள் நிற்கும்போதெல்லாம்
வயது கூடியதை கேட்காமலிருக்க
வருமானம் கூடியதை சொல்வார்.
சலிக்காமல் பொம்மையாகிவிடுவாள்.
பொறுமைக்கு பரிசு
கிடைக்காமலா போகுமென்று..
தாயும் தந்தையும் பேசுவது
ஆறுதலாக இருக்கிறதோ இல்லையோ
ஒருநாளும் வலித்தது இல்லையாம்.
மணப்பெண் கனவை கடந்து..
தாயாகவே கனவு காண்கிறாள்
அந்த முதிர் கன்னி.
மாதவிடாய் நின்றுவிடுமோ
என்ற அச்சம் இப்போதெல்லாம்
பக்தியோடு அவள் வணங்கும்போது
கடவுளுக்கு வருகிறது.
✨✨✨✨✨✨✨✨