தன்னம்பிக்கையின் உருவம் இது தலைகுப்புற விழுந்த கரப்பான்பூச்சி
தூக்கிவிட
எவரையும் அழைப்பதில்லை.
போராடி எழுகிறது.
பூச்சி தான் ஆனாலும்
மீசை வைத்துக்கொண்டு
பெண்களை மிரட்டும் இதற்கு
ஆண்வர்க்கத்து சாயல்.
என்னதான் தனிக்குடித்தனம்
போனாலும்..
சமயலறை சுத்தமாக இல்லையென்று
மாமியார் சொல்வதற்கு முன்
இது வந்து சொல்லிவிட்டுப் போகும்.
நீண்ட வரலாறை பெற்ற இது
ஆப்ரிக்காவில் தோன்றி
திருட்டு கப்பல் ஏறியே
புவியை சுற்றி வந்திருக்கிறது.
உலக சுகாதாரத்தின் லட்சணம்
இதன் கால் இடுக்கில் தெரியுமாம்
கள்ளத்தனங்களுக்கு
மோடி மஸ்தானுக்கு இணையாக
இதை சொல்லலாம்.
கட்டிலறையோ கழிவறையோ
இது குடும்பம் நடத்துவது இருட்டில்தான்.
அழுக்கிலிருந்தாலும்
ஆரோக்கியமாக வாழும் தன்னிடம்
தோற்றுவிட்டதாக வருந்தியே இது
நோய் கிருமிகள் வெல்வதற்கு
மனிதர்களை சிபாரிசு செய்யும்.
தலையே போனாலும்
நேர்மையாக வாழ்வேன் என்று
இது ஒன்றால் எளிதாக சொல்ல முடியும்.
தலையின்றியும் உயிர் வாழும் இது
பசியாலே மரணிக்கும்.
அருவருப்புதான் ஆனாலும்
தாய் பாலில் இருக்கும் புரதத்திற்கு
குறையாமல் இதன் பாலிலும் இருக்கிறதாம்.
பின்நாளில் மருத்துவத்தி்ற்கு
இதன் தேவை கூடினாலும் வியப்பில்லை.
டைனோசர் காலத்திலிருந்தே
வாழ்ந்து கொண்டிருக்கும் இதை
அழிக்க வந்திருக்கும்
கருப்பு ஹிட்டுக்கும்
காலாவதி தேதி இருப்பது நிதர்சனம்.
💢💢💢💢💢💢💢