அவன் அவளை கேட்டே
முடிவெடுப்பான்.
அவள் அவனிடம் சொல்லியே
தொடங்கி வைப்பாள்.
அவர்கள்..
கணவன் மனைவி அல்ல.
கணவனுக்கும் மனைவிக்கும்
தெரியாத புதிர்கள்.
உறக்கமில்லா இரவுகளும்
இரக்கமில்லா உறவுகளும்
களவாடிய நிம்மதியை
அவர்கள் கேட்டு பெறுவது
கள்ளத்தனத்தில் தான் என்றாலும்
அச்சத்தின் இருட்டில்
வெட்கத்தின் வெளிச்சத்தில்
நம்பிக்கை அங்கே
உறவாடிக் கொண்டிருக்கும்.
கண்ணியம் அதை காத்திருக்கும்.
ஆறுதலுக்கு கதவை திறந்து
கவலைகளுக்கு வெள்ளையடிக்கும்
இது இருட்டறைதான்.
ஆனால்..
இது கருவறைக்கு ஒப்பானது
சாமியா சிலையா என்பதுபோல்
காதலா நட்பா என்ற
விதாண்டாவாதத்திற்கு குறையில்லை
தூக்கத்திற்கு துணை நிற்கும் இது
துக்கத்தில் பங்குகொள்ளாமல்
கேள்விகளுக்கு
விடை அளிக்க முடியாமல்
விடைகளுக்கும் கேள்விகளான
வியப்பு குறியீடுகள்.
தொட்டுப் பேசினாலும்
காமம் கை கட்டி நிற்கும்.
அழுத விழிகளை
தொழுது துவட்டும்.
காதல் காலூன்றியதில்லை.
சிரித்தால் சிரிக்கும்
முறைத்தால் ரசிக்கும்
அடித்தால் அழுதுவிடும்
வயதுகளை கடந்த
இவைகளுக்கு குழந்தையின் சாயல்.
கத்தி மேல் நடக்கும்
வித்தை கற்றது.
உறவுகளின் பார்வையில்
கலங்கம் பெற்றது.
இது ஆண் பெண் நட்பு.
சாதி மதங்களின் ஆக்ரமிப்பை
தவிர்க்க முடியாததை போல
இதன் புறக்கனிப்பையும்
ஏற்றுக்கொள்ளும்
பக்குவத்திற்கு தள்ளப்படுவது..
கலாச்சாரத்தின் போர்வையிலா
அல்லது..
கள்ள விழிப் பார்வையிலா என்பது
இன்றுவரை பட்டிமன்ற
தலைப்பாகவே இருக்கிறது.
கள்ளமில்லா உள்ளங்கள்
இணைவதற்கு கூட
திருட்டுத்தனத்தை தான்
பரிந்துரைக்கிறது இச் சமூகம்.
ஆண் பெண் நட்பை
தகுதி நீக்கம் செய்தே
தாம்பத்தியம்..
வாழ்க்கையில் நுழைகிறது.
திருமணத்திற்கு பிறகு
ஆண் பெண் நட்பை
சாத்தியமற்றதாக கருதுவதற்கு
தனிமனித ஒழுக்கமே
பொறுப்பேற்கிறது..
என்றே இக்கவிதை
முற்றுப் பெறாமல் தொடர்கிறது.
👫👫👫👫👫👫👫👫