பூப்பெய்தியதோடு சரி
காயாவதில்லை
கனியாவதில்லை
ஆனாலும்..
நல்லதுக்கெல்லாம்
இதுதான் நாட்டாமை.
இந்தப் பூ தான்
என்னவள் சூடிய பிறகு
என்னை புரட்டிப்போடும்
புயலாகிறது.
என்னவளின் கூந்தலுக்கு
வந்த பிறகே
இந்தப் பூ
தீவிரவாதத்தை தொடங்குகிறது.
நறுமணத்தை வீசி
என்னை சாய்க்கும்போது
சரணாகதி அடையும் மனதை
சமாதானப்படுத்த
காதல் இருந்தபோதும்
கர்வமாக காமத்திடம்
கட்டி இழுத்துச் செல்கிறது.
ஆயுதங்கள்..
வல்லினமாகத்தான்
இருக்கும் என்பது ஏற்புடையதல்ல
இந்த பூக்களின் துரோகத்தை
எதிர்கொண்டவர்கள்
வீழ்ந்தேயிருக்கிறார்கள்.
ஆமாம்..
சமாதானத்தை நிறத்தில் காட்டி
முதுகுக்கு பின்னே இருந்துகொண்டு
இது தொடுக்கும் கனைகளில்
நாடி நரம்புகளை முறுக்கேற்றி
மூளை வரை சூடேற்றி
நிலை குலைய செய்யும் இது..
என்னவளின் கூந்தலுக்கு
செடி..
தத்து கொடுக்கும்வரை
இந்த சமத்துப் பி்ள்ளை
பூ தான்..
பிறகுதான் கருவியாகிறது.
வாழும் காலமென்பது
அதிகபட்சம் இரண்டுநாட்கள்தான்
ஆனால் ஆயுளுக்கும் மறக்காத
சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு
ஆனந்தமாகவே செல்கிறது.
நசுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு
குரல் கொடுக்கும் புரட்சியாளன்போல
தன்னை மகுடமாக
சூடிக்கொண்டவளுக்கு
கசக்கப்பட்ட நிலையிலும்
வெற்றியை தந்தே மடிகிறது.
கோபத்தை விரட்ட
தியானம் தேவையில்லை
மாறாக..
வன்முறையை கட்டவிழ்க்க
இவைகளை ஒன்றுசேர்ப்பாள்.
பொதுவாகவே
ஆசையை வரவழைக்க
பெண்கள் அன்பை பொழிவது
இதனிடம்தான்.
சமாதானத்தை வரவழைக்க
இவைகளை முன்னேவிட்டு
நான் பின் செல்வேன்.
என்னவளை சாந்தப்படுத்தி..
என்னை மூச்சிரைக்க
வைத்துவிடுமிது..
பெண்களின்
கௌரவ விருந்தாளியாகவே பார்க்கப்படுகிறது.
மங்களரமாக காட்டிக்கொள்ள
எத்தனையோ பூக்கள் இருக்கிறது
ஆனாலும்..
இந்த வெள்ளை
உடுப்புக்காரியைத்தான்
உடும்பு பிடியாக பிடிக்கிறது..
தாம்பத்தியம்.
மல்லிகை.
👑👑👑👑