என் அம்மாவுக்கு கல்யாணம்|தமிழ் கவிதை|tamil kavithai|Nynarin Unarvugal

அம்மாவுக்கு கல்யாணம்.

நான்...ரமா
ஏழாம் வகுப்பு படிக்கிறேன்
என் அம்மா..சுதா
என் பொக்கிஷம்
என்னை சுமந்தவள்
இன்னும் கீழே என்னை இறக்கவில்லை
என் அப்பா இறந்ததாலே..

என் அம்மாவின் காதலை
வளர்க்க..நானே தூது
முகம் சுழிக்காதீர்
சினிமா படம் கற்றுத்தரவில்லை
வாழ்க்கை பாடம் கற்றுதந்தது

ஆம்
என் அம்மாவின் ஆசையை தூண்டி
தினேஷின் ஏக்கத்தை போக்கி
சாதித்துவிட்ட ..
களிப்பில் இருக்கிறேன்

தினேஷ்
என் பள்ளித்தோழனாகி
எனக்கு அண்ணனானவன்
நான் அண்ணா என்றதும்
அவன் கண்கள் கலங்கும்
விளங்கமுடியாத புதிராய்
இருந்தவன்..
புழுங்க முடியாமல் அழுதான்
ஏண்ணா..என்றேன்
எனக்கு அம்மா இருந்திருந்தா
உன்ன மாதிரி எனக்கு
ஒரு தங்கச்சி கிடைச்சிருப்பா
அழுதவனை..
தொழுதேன் நான்
நான் இருக்கேண்ணா..
உன் தங்கச்சியா
கண்ணீரை துடைத்தேன்
அன்றிலிருந்து ..
மதிய சாப்பாட்டின் எடை கூடியது
தினேஷின் தளர்ந்த நடை மாறியது.

என் அம்மா வேலைக்கு 
செல்லும்போது..
சேலைக்கு பத்துப் பின் குத்துவாள்
ஏன் என்று கேட்டால்
கண் கொத்துவதை விட
பின் குத்துவது சிறப்பு..என
சிரிப்பாள்
திருக்குரள் இல்லையே..
என்பேன்
திருமதியின் குரல் என்பாள்
நானும் சிரிப்பேன்
புரிந்ததா என கேட்காதீர்.

விளக்கி வைத்த குத்துவிளக்காய் செல்பவள்
மாலையில்..
வழுக்கி வந்த கிழக்காய்
பழக்கிவந்த சிரிப்புடன்
இழுத்து வைத்து அணைப்பாள்
அவள் கண்களில் ஈரம் கசியும்
எனக்கு தெரியும்..
என் அம்மாவின் மார்பை
எத்தனை கண்கள் அளவெடுத்திருக்கும் என்பதை..
ஆச்சிரியமாய் பார்க்காதீர்
இது டீவி சீரியல் கற்றுதந்த பாடம்

அதுவரை நான் வீட்டில்
தனியாக இருப்பதில்லை
கனகம்மா இருப்பாங்க
வீட்ல வேலை செய்றாங்க
வேலைக்காரினு எப்பவும்
நினைச்சதில்லை
யாரிடமும் அப்படி சொன்னதில்லை
இது என் தமிழ் ஆசிரியர்
ஜெயப்பிரகாஷ் ஸார்
கற்று தந்த பண்பு
மனிதரை மனிதராய் மதிக்கவேண்டும் இது அவர் பாடம்
அவர்தான் தினேஷின் அப்பா
தினேஷின் அம்மா விபத்தில் இறந்துவிட்டார்
என் அப்பா குடித்து விபத்தாக்கி இறந்துவிட்டார்.

என் அம்மாவின் பெயர்
சுதா...
என்றேன் நினைவிருக்கிறதா
சும்மா தா...
என்பதின் சுருக்கமோ சுதா
என யோசிக்க வைத்தது சோதனை
எங்கள் தீரா வேதனை

மளிகை கடைகாரர்
கடன் வாங்கி..
மாத சம்பளம் வாங்கும்போது
மொத்தமாய் கொடுப்பது வழக்கம்
நன்றாக பேசுவார்
நான் போகையில் சாக்லேட் தருவார்...இலவசமாக
பின்நாளில் தெரிந்தது
வசமாக்கதான்
இலவசம் என்பது

ஒருநாள்..
சுதா இன்னிக்கி அக்காயில்ல
ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கல
சமைச்சி வைக்கிறீயா
கடை அடைச்சிட்டு வீட்டுக்கு வரேன்..
சொன்னதும்
என் அம்மா சரிணா என்றாள்.

வெள்ளேந்தியாய் வந்தவளை
சொல்லேந்தி வந்தவனாய்
வில்லேந்திய வார்த்தையாய்
இனி மளிகை சாமானுக்கு
காசு தரவேணாம்
அப்பப்ப நைட்டு வரேன்
எனக்கு வேண்டிய சாப்பாடை போட்டுடு..
ஏறிட்ட தோரணையும்
சோறிட்ட கையை பிடித்ததும்
வீறிட்டு எழுந்தவள்
உங்கள..அண்ணா என்று அழைத்தேனே
ச்சே...என்று
என்னை தூக்கி கொண்டு
கதவை சாத்திக்கொண்டாள்
நான் அம்மாவின் கண்ணீரை துடைத்தேன்.
விதவை..
கதவை தான் சாத்தமுடியும் போல...
சிறிது நேரத்தில் அம்மா தூங்கிவிட்டாள்
நான் தூங்கவில்லை

நாட்கள் நகர்ந்தது
ஒருநாள் இரவில்
கதவு தட்டும் ஒசை
அம்மா சட்டென திறக்கமாட்டாள்
மிருகம் என்றால் பராவாயில்லை
மனிதன் என்றால்...
என்ன பாதுகாப்பு
யாரது...
நான் தான் ஏரியா கவுன்சிலர்
என்ன இந்த நேரத்ல
வீட்டுக்கு நேரா தெருவிளக்கு
போட்டிருக்கேன்
உன் வீட்டுக்கும் விளக்கா இருக்கேன்..
நீ கொஞ்சம் விலக்குனா போதும்
அம்மா பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு
பகல்ல..அம்மாங்கிறீங்க
ராத்திரில மாறுமா..அப்பா....
என்றதும் நிசப்தம்
போய்விட்டார் போல
அன்று நான் தூங்கிவிட்டேன்
அம்மா தூங்கவில்லை

மறுநாள் சோர்வில்
அம்மா வேலைக்கு போகவில்லை
என்னை பள்ளி அழைத்துவந்தாள்
நான் சந்தோஷித்தேன்
தினேஷிடம் அறிமுகம் செய்தேன்
குதுகலித்தான்
என் அம்மாவின் விரல் பிடித்து
அவன் அப்பாவிடம் சென்றான்
அப்பா...
என் அம்மா...
என்றான்
பதறினார் அவன் அப்பா
உதறினாள் என் அம்மா
அன்று முடிவு செய்தோம்
நானும் தினேஷும்
இவர்கள் இனைவதற்கு
போராடினோம்

ஒவ்வொரு நாளும் யோசித்தேன்
ஒரு பெண்ணின் பாதுகாப்பு
ஆணின் அரவணைப்பில்
இருப்பதாகவே ..
நினைக்கிறது இச்சமூகம்

தமிழ் ஆசிரியர்
ஜெயப்பிரகாஷ் ஸார்..
எனக்கு நல்ல தந்தையாக இருக்கிறாரோ இல்லையோ
என் அம்மாவுக்கு நல்ல காதலனாக..கணவனாக இருந்தால் போதும்
எனக்கு...தினேஷ்
நல்ல அண்ணனாக இருப்பான்.

முயற்சி வென்றது..
என் அம்மாவுக்கு நாளை கல்யாணம் வந்துடுங்க பிரண்ட்ஸ்........
👫👫👫👫👫👫👫👫👫👫👫👫நயினாரின் உணர்வுகள் 

Post a Comment

Previous Post Next Post