ஹிட்லரின் காதல்

அன்பே இவா ப்ரான்

உன் பதினேழு வயதில்
என்னை விழுங்கத் தொடங்கினாய்
என் நாற்பது வயது
உனக்கு செரிமானமாகவில்லை
ஆனாலும்
விடவில்லை நீ

உன் முப்பத்திமூன்று வருடமும்
என் ஐம்பத்தியாறு வருடமும்
மணமுடித்து வாழ்ந்தது
சில மணி நேரங்கள்தான்
ஆமாம்
இருபது மணி நேரம்
என் மனைவியாக வாழ்வதற்கு
நீ பதினாறு வருடங்கள்
காதலியாக பயணித்தாய்

காதலை கருணையோடு
ஒப்பிடுவார்கள் மூடர்கள்
அதனால்
என்னை ஏமாளியாக
மக்கள் நினைத்துவிடக்கூடாதென்றே
உன்னை மறைத்தே வைத்தேன்

நீ அருந்திய மதுகோப்பையும்
நீளம் பூத்து கிடக்கிறது
சிதறப்போகும் என் ரத்தமும்
அதில் நீளமாக தெரியுமோ என்னவோ
நம்பிக்கை இழக்காதே இவா ப்ரான்
கண் மூடு
கதவை மூடிவிட்டு நானும் வருகிறேன்

வாழ்க்கை முடியவில்லை இவா ப்ரான்
வேட்டையாடியது போதுமென்று உயிரைத்தான் விட்டு வரப்போகிறேன்
என் உயிலை
உன்னை எழுதச் சொன்னது
இந்த மண்ணில்
நம் காதலை விதைக்கத்தான்

என் ஆசை உன்னோடுதான்
வரப் போகிறது
இந்த சர்வாதிகாரியை
மட்டுமல்ல
நம் காதலையும் உயிரோடு பிடிக்க
எப்படி அனுமதிப்பேன்

என் இதயம்
உன்னோடு இருப்பதால்
என்னை இதயமற்றவன் என்று
சொல்வதைக் கூட ஏற்பேன்
உன் காதலை கொல்லாமல்
என்னோடே அழைத்துச் செல்கிறேன்
அன்பே இவா ப்ரான்
இரக்கமற்றவன் என
இந்த உலகம்
இனியாவது சொல்லாமலிருக்கட்டும்
💗💗💗💗💗💗💗💗💗
நயினார்

Post a Comment

Previous Post Next Post