சதுரங்கம்

நான் சிப்பாய்
நீ ராணி
வாழும் இந்த
சொற்ப காலத்தில்
உன்னோடு நான்
இருந்த நாட்கள் குறைவுதான்

அறுபத்திநான்கு கட்டங்களிலும்
உன்னோடு
வாழ்ந்துவிட ஆசைப்பட்டேன்
என்ன செய்வது
நான் இரவில் இருந்தால்
நீ பகலில் இருக்கிறாய்

வெளிச்சமும்
இருளும்
சங்கமிக்க 
ஒரு யுத்தம் தொடங்கிவிட்டது
காதலித்தபோதே
வந்திருக்கலாம் நீ

அறுபத்திநான்கு கலைகளை
கட்டங்கள் என
திருத்தியிருப்பது
இப்போதுதான்
தெரிகிறது என்கிறாய்

காமம் கண்ணை
மறைக்கிறது என்பார்கள்
சொல்லட்டும்
ஆண்மையற்ற அரசனுக்கு
மனைவியானதை விட
வேறு என்ன கண்டாய்

இச்சமூகத்தின் மீதுள்ள
அச்சம் தான்
காதலைக்கூட
கள்ளக் காதல் என பிரிக்கிறது
ஷாஜகானையும்
மும்தாஜையும்
கொண்டாடியதே கூட்டம்
என்றுதானே கேட்கிறாய்

இருப்பவனுக்குத்தான்
தாஜ்மகால்
இல்லாதவனுக்கு சிறைதான்
நிதி தானே
நீதியை திருத்துகிறது
பாரேன்
வாழும்போதும் பிரித்தவர்கள்
நீயும் நானும் மடிந்ததும்
நம்மை தனியே
ஒன்றாககூட
புதைக்கவிடமாட்டார்கள்
நமக்கிடையில்
யானை குதிரையோடு
அந்த அரசனையும்
ஒரே பெட்டிக்குள் வைத்தே
புதைத்துவிடுவார்கள் சண்டாளர்கள்.
💗💗💗💗💗💗💗💗💗
நயினாரின் உணர்வுகள்

Post a Comment

Previous Post Next Post