பெண்மையின் பரிணாமங்களில்
மையம் கொண்ட புயல்..
பிடுங்கி போடுகிறது
பூக்களின் இயல்பை.
பூப்பெய்தினாளாம்.
இயல்பான ஆரம்பத்தை
ஆராவரமாக கொண்டாடி
வளமையாகும் மாதங்களை
தீட்டென்றே
தள்ளி வைக்கிறது சமூகம்.
ஆமாம்..
சம்பிரதாயமாக
சடங்கு வைத்து
தொடங்கி
வைக்கப்படுகிறது வலி.
அவசரத்திற்கு..
அவகாசமில்லாமல்
முன் அறிவிப்பின்றி
வரும் மரணத்தை போல
அழுகையோடு வரும்
அழுகிய அணுக்களுக்கு
வெண்பஞ்சு அட்டையில்
சிவப்பு கம்பளம் விரிக்கிறது
அடிவயிற்றை கவ்விய வலி.
பொறுப்பும் வெறுப்பும்
சகித்துக்கொள்ள
பக்குவப்படு என்றே..
பெண்மையின் உளவியல்
உந்தும் உதிரத்தை
சொல்லி அனுப்புகிறது.
இறைவனின்..
ஆகச்சிறந்த இறுதிபடைப்பு
பெண்..
சிந்தும் உதிரத்தை
தாய்மையை தவறவிட்ட
ஆணின் கண்ணீராய்
மதிப்பான் மனிதன்
என நினைத்தானோ..இறைவன்.
உடலில் ஏற்படும்
பிரளயத்தை மறைத்து
தலைவலி என்றே
கடக்கச் சொல்லும்
சமூகத்தில்..
பெண்ணை
பூவோடு சேர்ந்த
மெல்லினமென்று
பொய் சொல்லாதீர்கள் கவிஞர்களே.
💢💢💢💢💢💢💢